தந்தையே நான் யூசுப்.
தந்தையே என்னுடைய சகோதரர்கள் என்னை நேசிக்கவில்லை.
அவர்களோடு நான் இருப்பதை விரும்பவுமில்லை.
என் உரிமை மீரப்படுகிறது
கற்களாலும் வார்த்தைகளாலூம்
என்னை தாக்குகின்றனர்.
என் மரணத்தை நேசித்து என்னை புகழ்கின்றனர்.
என்னை விட்டும் உன் வீட்டின் கதவை மூடி விட்டார்கள்.
அவர்களால் வயலில் இருந்து விரட்டப்பட்டேன்.
தந்தையே என் திராட்சையில் நஞ்சூடினார்கள்.
தந்தையே அவர்கள் என் விளையாட்டு பொருட்களை உடைத்தனர்.
தென்றல் காற்று வீசுயபோது
என் முடி அதனோடு விளையாடியது
என்மீது அதீத கோபம் கொண்டார்கள்
உன்மீதும் ஆத்திரமடைந்தனர்.
தந்தையே நான் அவர்களுக்கு என்னதான் செய்தேன்.
பட்டாம்பூச்சிகள் என் தோள்களில் அமர்ந்து கொண்டன
கதிர்கள் என் பக்கமாய் சாய்ந்து கொண்டது
என் உள்ளங்கைகளில் பறவை வந்து அமர்ந்து கொண்டது
தந்தையே
என்னதான் செய்தேன் அவர்களுக்கு
ஏன் எனக்கு இப்படி நிகழ்கிறது
நீ எனக்கு யூசுப் என பெயரிட்டாய்
கிணற்றிலே அவர்கள் என்னை தள்ளினார்கள்
ஓநாயை குற்றம் சாட்டினர்
என் சகோதரர்களைவிட ஓநாய் கருணைமிக்கது.
தந்தையே!
பதினொரு நட்சத்திரங்களும்
சூரியனும் சந்திரனும்
எனக்கு சிரம் தாழ்வதை நான் கண்டேன்
என்று சொன்ன போது
யாருக்கும் தவறிழைத்தேனா?
"வர்துன் அகல்" கவிதை தொகுப்பிலிருந்து.
****
றியாஸ் காதர்