1 பூரண விருத்தி
விருத்தி காரணமாக ஏற்படும் மாற்றம் பண்பு ரீதியானது. பிள்ளையின் விருத்தி என்பது எதிர்பாராத விதமாக, முறையற்ற விதத்தில் நிகழ்வதில்லை. ஒரு கட்டத்திலிருந்து இன்னொரு கட்டம் வரை பிள்ளையின் சகல துறைகளிலும் ஏற்படும் விருத்தியே பூரண விருத்தியாகும்.
ஓரு பிள்ளையின் விருத்தி என்பது
1. உடல் வளர்ச்சி
2. உள வளர்ச்சி
3. மனவெழுச்சி வளர்ச்சி
4. சமூக வளர்ச்சி
5. ஒழுக்க வளர்ச்சி
ஆகிய ஐந்து துறைகளும் ஒன்றோடு ஒன்று நெருங்கிய தொடர்பு காணப்படுவதோடு, பிள்ளையின் வளர்ச்சி இவ் ஐந்து துறைகளிலும் திருப்திகரமாக நிகழ்வதனையே பூரண விருத்தி என்பர். பிள்ளைகளின் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பாக செயற்படும் போது ஒரு பிள்ளையின் பூரண விருத்தி ஏற்படுவதற்காக உழைக்க வேண்டியது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் தலையாய கடமையாகும்.
2 பிள்ளைகளின் பூரண விருத்தியில் ஆசிரியர்களின் வகிபங்கினை பரிசீலிக்குக.
பிறந்தது முதல் பாடசாலை கல்வி முடியும் வரையுள்ள காலப்பகுதிக்குள் வளரும் குழுவினரே “பிள்ளைகள்” எனக் கல்வி உளவியலாளர்கள் கருதுகின்றனர். கல்வியின் தலையாய நோக்கம் குழந்தையின் வளர்ச்சி கூறுகள் சிறந்த முறையில் விருத்தியடைவதோடு அவற்றில் பயன் மிக்க மாற்றங்களும் தோன்றுவதற்கு துணை செய்வதாகும். பிள்ளைகளிடம் கல்வியின்றியும் இயற்கையான வளர்ச்சி நிகழும். ஆனால் அவ்வளர்ச்சி சிறந்த முறையில் அமையமாட்டாது என்பது கல்வி சிந்தனையாளர்களின் கருத்தாகும்.
உடல் வளர்ச்சியில் ஆசிரியர்களின் வகிபங்கினை பரிசீலிப்போமேயானால் வயது அதிகரிக்க அதிகரிக்க உடலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் உடல் வளர்ச்சி எனப்படும். உடல் வளர்ச்சி வேகத்திலே பிள்ளைகளிடையே வேறுபாடுகள் காணப்படும் உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களும் விருத்தியும் பிள்ளைகளுக்கு புதிய அனுபவங்களாக அமைகின்றன. ஏனைய வளர்ச்சி கூறுகளின் இயல்புகளுக்கு உடல் வளர்ச்சியே அடிப்படையாக விளங்குகின்றது.
ஆசிரியர்கள் பாடசாலை நேரங்களில் பிள்ளைகளின் உணவில் கூடிய கவனம் செலுத்த வேண்டும். பிள்ளைகள் உட்கொள்ளும் உணவில் போசணை அடங்கியுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்வதோடு வயதுக்கேற்ப உடல் எடை அதிகரிப்பையும் அறிந்திருக்க வேண்டும். மேலும் பிள்ளைகளின் தவறான உணவு பழக்கவழக்கங்களை நிறுத்துவதன் மூலமாக ஆசிரியர்கள பிள்ளைகளின் வயதுக்கேற்ற உடல் வளர்ச்சியை ஏற்படுத்தலாம்.
உள வளர்ச்சியில் ஆசிரியர்களின் வகிபங்கினை பரிசீலிப்போமேயானால் உள வளர்ச்சி என்பது நுண்மதியுடன் தொடர்புடையது. ஆசிரியர்கள் பிள்ளைகளின் புலனுணர்ச்சி, புலக்காட்சி, கற்பனை செய்தல், ஞாபகம், கிரகித்தல், கண்டுப்பிடித்தல், நெறிப்படுத்தல் முதலிய உளத்திறன்களை வளர்ப்பதற்கான கற்றல் செயற்பாடுகளை ஒழுங்குப்படுத்துவதன் மூலமாக உள வளர்ச்சியை உண்டாக்கலாம். ஆசிரியர்களாகிய நாம் அழிவு சார் மனவெழுச்சிகளையே நன்னெறிப்படுத்த வேண்டும். இது கல்வி செயன்முறையில் எந்நிலையிலும் அடங்க வேண்டிய ஓர் இலக்காகும்.
பிள்ளைகளின் மத்தியில் ஏற்படகூடிய சினம், வெறுப்புஇ பொறாமை முதலிய தீங்கான மனவெழுச்சிகளினால் உளத்தாக்கங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் தீங்கான மனவெழுச்சிகள் ஏற்படுகின்ற போது அவற்றை சீராக்கிக் கொள்வதற்காக ஆசிரியர்கள் சில உளவியற் செயன்முறைகளை கையாளலாம்.
1. தீங்கான மனவெழுச்சிகளை ஏற்படுத்துகின்ற தூண்டிகளை நெறிப்படுத்தல் அல்லது பிரதியீடு செய்தல்.
2. உண்மையான துலங்களுக்கு பதிலாக பிழையான துலங்கல்களை காட்டல்.
3. மனவெழுச்சிக்கு காரணமான செயலை ஆசிரியர்கள் செய்து காட்டல்.
4. மனவெழுச்சிகள் தோன்றுவதற்கான காரணிகளை அகற்றுவதற்காக வேறு விடயங்களில் மனதை செலுத்த செய்தல், தியானம் செய்தல்.
உடல் வளர்ச்சி, உள வளர்ச்சி, மளவெழுச்சி வளர்ச்சி ஆகியவற்றிலிருந்து ஒருவனுடைய சமூகம் சார் வளர்ச்சியை பிரித்து நோக்க முடியாது. மனிதன் ஓர் சமூகப் பிராணி. மனிதன் சமூகத்தை பிரிந்து தனித்து வாழ முடியாது. மனிதனது நடத்தைகள் சமூகத்துடன் பின்னிப் பிணைந்துள்ளது. மனிதனது சமூகம்சார் வளர்ச்சி என்பது அவன் வாழுகின்ற சமூகத்தில் பிணக்கின்றி இணக்கமாக வாழுகின்ற அறிவு, திறன், மனப்பாங்கு மனவெழுச்சிகள் ஆகியவற்றை தன்னுள்ளே வளர்த்துக் கொள்வதாகும்.
பிள்ளைகள் பாடசாலை விழுமியங்கள்இ பண்பாட்டு கோலங்கள். அறநெறி ஒழுக்க விதிகள், சமூக உறவுகள் ஆகியவற்றை பாடசாலையில் கற்பதன் மூலம் சமூக வளர்ச்சியை பெற்றுக் கொள்ள முடியும்.
மேலும் பிள்ளைகளிடம் ஒழுக்க வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பிள்ளைகளை புகழ்தல்இ வெகுமதிகள் வழங்கல்இ விடயங்களை அதிகமாக ஆராயாமல் பொருட்படுத்தாது விடுதல் முதலிய நுட்ப முறைகளை கையாளுவதனால் ஆசிரியர்கள் பிள்ளைகளின் ஒழுக்க வளர்ச்சியை மேம்படுத்தலாம்.
இவ்வாறான நான்கு வளர்ச்சி கூறுகளிலும் ஆசிரியர் ஒருவர் சமமான பங்களிப்பு செய்வாரேயானால் பிள்ளைகளிடம் பூரண விருத்தி ஏற்படும் என்பதில் ஐயமில்லை.
3 முதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் இடையிலான இடைவினைத் தொடர்பினை பரிசீலிக்குக
முதிர்ச்சி என்பது வயதுக்கு ஒத்து விருத்தியடைகின்ற நடத்தை மாற்றமாகும். அது பிள்ளையின் உடலமைப்பினுள் உண்டாகின்ற மாற்றத்தினால் ஏற்படுகின்ற ஒரு வகையான உள்ளார்ந்த வளர்ச்சியாகும். அதாவது குறித்த வேலையை செய்வதற்குரிய உடல்இ உள ஆயத்த நிலையாகும். முதிர்ச்சியானது பிறப்புரிமை காரணிகளிலும்இ ஊட்டச்சத்துஇ உடல்நலம் ஆகியவற்றில் தங்கியுள்ளது. முதிர்ச்சி என்பது முழுமையான நடத்தை மாற்றமாகும். இதனை 3 வகையாக பிரித்து நோக்கலாம்.
1. உடலியக்க முதிர்ச்சி
2. உள முதிர்ச்சி
3. சமூக முதிர்ச்சி
பிள்ளையின் உடலியக்க முதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் இடையிலான இடைத்தொடர்பினை பரிசீலிப்போமாயின் பிள்ளையின் இயக்கம் முதிர்ச்சி அடைவதிலும் கற்றலிலும் தங்கியுள்ளது. சில வகை நடத்தைகள் முதிர்விலும் வேறு சில வகை நடத்தைகள் கற்றலிலும் தங்கியுள்ளது. பிள்ளையின் வளர்ச்சியின் ஆரம்ப நிலைகளில் முதிர்ச்சியின் தாக்கம் அதிகமாகவுள்ளதோடு பிள்ளை வளர்ச்சியடையும் போது முதிர்ச்சியின் தாக்கம் குறைந்து கற்றலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இருத்தல்இ நடத்தல்இ போன்ற உடலியக்க செயல்கள் எல்லாம் கற்றலை விட முதிர்விலேயே பெரும்பாலும் தங்கியுள்ளன.
முதிர்வும் கற்றலும் உடலியக்க வளர்ச்சியில் கொண்டுள்ள தாக்கத்தை அறிவதற்கு விலங்குகளிலும், குழந்தைகளிலும் ஆய்வு செய்யப்பட்டது.
விலங்குகளின் பரிசோதனை
தவளைக்குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளி வந்ததும் நீந்துவதற்கு பயிற்சி அளிக்கப்பட்டது. ஆனால் அவை நீந்துவதற்குரிய முதிர்ச்சியடையும் வரை நீந்தவில்லை.
குருஸ் என்பவர் கோழிக்குஞ்சுகளில் நடத்திய ஆய்வில் கோழிக்குஞ்சுகள் உணவுத்தட்டில் உள்ள தானியத்தை கொத்த பயிற்சியளித்தார். முட்டையிலிருந்து வெளிவந்த கோழிக்குஞ்சுகளுக்கு கொடுக்கப்பட்ட பயிற்சிலும் பார்க்க நாளுக்கு நாள் வழங்கப்பட்ட பயிற்சி அதிக பயனளித்தது.
குழந்தைகளில் பரிசோதனை
பெரும்பாலும் ஒத்த இரட்டையர்களிலேயே பரிசோதனைகள் நடத்தப்பட்டன. கெசலும், தொம்சனும் இரு தொகுதியினரை தெரிந்து ஒரு தொகுதியினருக்கு முதிர்ச்சியடையும் முன்னர் கற்றல் பயிற்சி அளித்தனர். பின்னர் இரு தொகுதியினரையும் படியேற விட்டபோது பயிற்சி அளிக்காத தொகுதியினரே விரைவாக படியேறியதை கண்டனர். ஆகவே இந்த ஆய்வுகள் உடலிக்க வளர்ச்சியில் முதிர்ச்சியின் செல்வாக்கை வெளிப்படுத்தின. முதிர்ச்சியடைவதற்கு முன்னர் அளிக்கும் கற்றலை விட முதிர்ச்சியடைந்த பின்னர் அளிக்கும் கற்றலே அதிக பயனுடையது.
பிள்ளையின் உள முதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் இடையிலான இடைத்தொடர்பினை பரிசீலிப்போமாயின் எழுதுதல், வாசித்தல், கணித்தல் முதலிய உளச்செயல்களில் முதிர்சிசியின் பங்குபற்றல் சிறிதளவு தான் அறியப்பட்டுள்ளது. உள செயல்களில் பயிற்சி கொடுக்க ஏற்ற பருவங்களை “உளவயது நியமங்கள் என்பர். பிள்ளைகள் முதிர்ச்சியடைவதற்கு முன்னர் உளச்செயல்களை கற்பிக்கக் கூடாது.
மேலும் பிள்ளையின் சமூக முதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் இடையிலான இடைத்தொடர்பினை பரிசீலிப்போமாயின் பிள்ளை குறித்த சமூக நடத்தையை பெறுவதற்கு அதற்குரிய முதிர்ச்சி நிலையை அடைதல் வேண்டும். ஒரு குழந்தை குறிப்பிட்ட வயதிலேயே சிரிக்கின்றது. அவ்வாறே பெற்றோரிடம் அன்பு செலுத்தவும் ஆரம்பிக்கின்றது. பொறாமை, அன்பு, பணிவு போன்ற சிக்கலான மனவெழுச்சிகள் அவற்றிற்கு பொருத்தமான முதிர்ச்சியடையும் போதே வளர்ச்சியடைகின்றன. குழு விளையாட்டு, சமூக பழக்கவழக்கங்கள் போன்றவற்றை கற்றுக்கொள்ள முதிர்ச்சியடைய வேண்டும். முதிர்ச்சியடைவதற்கு முன்னர் உண்மை பேசுதல்இ கீழ்ப்படிவு, நேர்மை போன்ற சமூக நடத்தைகளை கற்பித்தல் பிள்ளைகளுக்கு தீங்கு விளைவிக்கும்.
ஆகவே பிள்ளைகளின் முதிர்ச்சிக்கும் கற்றலுக்கும் இடையில் மிக நெருங்கிய இடைத்தொடர்பு காணப்படுகின்றது.
4 கற்பித்தல் - கற்றல் அனுபவம் ஒன்றினை வடிவமைக்கின்ற போது ஆசிரியர் ஒருவர் ஏன் முதிர்ச்சி மட்டத்தை கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கான மூன்று காரணங்களை குறிப்பிடுக.
கற்பித்தல் - கற்றல் அனுபவம் ஒன்றினை வடிவமைக்கின்ற போது ஆசிரியர் ஒருவர் முதிர்ச்சி மட்டத்தை கவனத்தில் எடுக்க வேண்டும். காரணம்:
1. ஆசிரியர்கள் குறிப்பிட்ட விடயத்தை பிள்ளைகளுக்கு கற்பிப்பதற்கு முன்னர் குறிப்பிட்ட விடயத்தை கற்பதற்குரிய ஆயத்த நிலையை பிள்ளைகள் அடையும் முன்னர் கற்பிப்பதினால் பிள்ளைகள் மனமுறிவடைந்து கல்வியில் வெறுப்புக் கொள்வர்.
2. போதிய அளவு முதிர்ச்சியடைந்த பின்னர் நீண்டகாலம் தாமதித்து கற்பிப்பதினால் ஏற்ற காலத்தில் அதற்குரிய வாய்ப்புக்களை இழப்பதினால் பிள்ளைகள் பிற்போக்கு அடைவர்.
3. முதிர்ச்சியடைவதற்கு முன்னர் மிக சிக்கலான உளச்செயல்களை கற்பிப்போமேயானால் இவை பிள்ளையின் சமூக நடத்தையில் பாரிய பாதகமான தாக்கங்களை விளைவிக்கும்.
எனவே கற்பித்தல் - கற்றல் அனுபவம் ஒன்றினை வடிவமைக்கின்ற போது ஆசிரியர் ஒருவர் பிள்ளையின் ஆயத்த நிலையை கவனத்தில் எடுக்க வேண்டும்.
5 கட்டிளைஞர்களின் ஆளுமை விருத்தியில் சகபாடிக்குழுக்கள் வலுவான முறையில் செல்வாக்கு செலுத்துகின்றன. என்ற கருத்துக்கு சாதகமான மூன்று காரணங்களைத் தருக.
கட்டிளமை பருவத்தினரின் ஆளுமை விருத்தியில் சகபாடிகளின் உறவு மிக முக்கியமானது. ஆரம்பத்தில் ஒத்த பாலாருடன் குழுவாக சேர்வர். பின்னர் இருபாலாரையும் கொண்ட குழுக்களாக கூடி தமது சமூக உறவை விருத்தி செய்துக் கொள்வர்.
1. கட்டிளமை பருவத்தினர் குழுவாக செயற்படும் போது தங்களுக்கரிய தொழில் வழிகாட்டல் ஆளுமையை விருத்தி செய்துக் கொள்வர். சகபாடி குழுக்கள் மூலம் அறிவை பெற்றுக் கொள்வதோடு நடத்தை நியமங்களையும்இ மனவெழுச்சிகளில் உறுதிப்பாட்டையும் பெற்றுக் கொள்ளலாம்.
2. கட்டிளமை பருவத்தினர் நூல்கள் வாசிப்பதில் அதிக நாட்டம் உடையவர்களாக காணப்படுவர். ஆண்கள் துப்பறியும் கதைகள்இ வீரதீர செயல்களை கொண்ட கதைகள், மர்மக் கதைகள், பாலியல் கதைகள், அறிவுசார் கதைகள் வாசிப்பதில் நாட்டமுடையவர்களாக காணப்படுவதனால் மனவெழுச்சி சார் ஆளுமைகள் விருத்தியடையும்.
3. கட்டிளமை பருவத்தினர் வைத்தியர்இ பொறியியலாளர், வைத்தியர், கணக்காளர், தொழிநுட்பவியலாளர் முதலிய தொழில்களையே அதிகம் விரும்புவதனால் தம் இலட்சியங்களின் பால் பயணிக்கக்கூடிய ஆளுமை விருத்தி சகபாடிக்குழுக்கள் மூலமாக கிடைக்கப்பெறும்.
4. தற்போது கட்டிளமை பருவத்தினரிடம் காணக்கூடிய சமூக ரீதியிலான ஆளுமை விருத்தி யாதெனில் உரிய தொழில் கிடைக்காத போதும், சமூகத்தில் கணிப்பு கிடைக்காத போதும் சமூகத்தில் ஏற்படக்கூடிய சட்டவிரோதமான செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பர்.
ஆகவே கட்டிளைஞர்களின் ஆளுமை விருத்தியில் சகபாடிக்குழுக்கள் வலுவான முறையில் செல்வாக்கு செலுத்துகின்றனர்.
6 “அறிகை” மற்றும் “பேரறிகை” என்ற எண்ணக்கருக்களை விளக்குக.
உளவியலில் “ அறிகை” என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். 1960 களில் ஜெரோம் புறூனர், ஏ. மில்லரும் அறிகை கற்கைக்கான ஹார்லாட் நிலையம் ஒன்றை தாபித்து அறிகைப்புரட்சி ஒன்றை ஏற்படுத்தினார்கள். இன்று நாம் எவ்வாறு சிந்திக்கின்றோம் என்பதை பற்றிச் சிந்திக்கும் ஆற்றலை மீ அறிகை என்கின்றோம். இம் மீ அறிகை பற்றிய சிந்தனையும் அறிகை உளவியலின் தற்கால விருத்தியாகும்.
அறிகை என்பது அறிவைப் பெறுதல் ((acquiring) ) நிறுத்தி வைத்திருத்தல் (retaining) பயன்படுத்தல் (using) ஆகிய உயர் உளத்தொழிற்பாடுகளை குறிக்கும் ஒரு பொதுவான பதமாகும். அறிகை தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டவர்களுள் ஜீன் பியாசே மற்றும் ஜெரோம் புறூனர் ஆகியோர் சிறப்பாக குறிப்பிடத்தக்கவர்கள். மனிதர்களின் எண்ணங்களும்இ அவற்றின் அடிப்படையில் நிகழும் செயல்களும் அறிகை இயங்கு முறைகள் என அழைக்கப்படும். இரு அடிப்படையிலான உளத்தொழிற்பாடுகள் கருத்திற் கொள்ளப்படும்.
1. புலக்காட்சி - இது சூழலிலுள்ள சக்திகளை கண்டறிந்து உயிரினால் விளக்கம் அளிக்கப்படும் செயன்முறை
2. கற்றல் - புதிய கருத்துக்களும், நடத்தைகளும் பெற்றுக்கொள்ளப்படும் செயன்முறை.
மேலும் “ பேரறிகை” என்பது மனிதர்களின் நடத்தை மற்றும் மன எண்ணங்களை ஆய்வு செய்யும் ஓர் உளவியலாகும். பேரறிகை உளவியல் நரம்பியல் அடித்தளங்களை கற்பிக்கின்றது. உளவியலாளர்கள் மூளையின் வெளிப்பாட்டின் மூலம் மனித நடத்தைகளை புரிந்துக் கொள்ள முயல்வதனையே பேரறிகை உளவியல் என்பர். தனிநபர் மற்றும் குழுக்களின் மன உணர்வுகளை ஆய்வு செய்வதன் மூலம் சமூக நடத்தைகள், மன நல செயற்பாடுகளை அறிய முடியும். மனநல ஆரோக்கியம் பாதிக்கப்பட்ட ஒருவர் உளவியலாளர்களுடன் கலந்துரையாடி சிகிச்சை பெறும் ஓர் உளவியல் முறையாக பேரறிகை உளவியல் விளங்குகின்றது.
7 நீங்கள் ஆய்வு செய்த பிள்ளைகளில் இருந்து குறிப்பான உதாரணங்களை தந்து அத்தகைய வேறுபாடுகளுக்கான காரணங்களை வெளிப்படுத்தி நீங்கள் பிள்ளைகளில் இனங்கண்ட ஒற்றுமைகளையும்இ வேற்றுமைகளையும் ஆராய்க.
ஆய்வு செய்யப்பட்ட பிள்ளைகளில் இனங்கண்ட ஒற்றுமைகள்.
தனியாள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட மாணவர்கள் நல்லத்தண்ணீர் தமிழ் மஹா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 7 வகுப்பை சேர்ந்த 12 வயதுக்குட்பட்ட மாணவர்களாவர். பிள்ளைகளின் உடல் விருத்தி, அறிவு சார் விருத்தி, சமூக விருத்தி, மனவெழுச்சி விருத்தி, ஒழுக்க விருத்தி என்பன ஆய்வு செய்யப்பட்டன.
பிள்ளையின் உடல் விருத்தி தொடர்பான விடயங்களில் மாணவர்களிடையே பொதுத்தூய்மை நன்றாகவே காணப்படுகின்றது. 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகளின் உயரம் 140உஅ -160உஅ க்கு இடையில் காணப்பட வேண்டும். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நான்கு மாணவர்களும் இவ் உயரங்களுக்கிடையில் காணப்படுவதோடு பிள்ளையின் நிறையை பொறுத்தளவில் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் 15மப -20மப க்கு இடையில் காணப்பட வேண்டும். ஆய்வுக்குட்படுத்தப்பட்ட நான்கு மாணவர்களும் இந் நிறைகளுக்கிடையில் உள்ளதோடு மாணவர்களின் உடற் பருமனை பொறுத்தமட்டில் நால்வரும் மெலிவாக உள்ளனர்.
பிள்ளைகளின் பார்வைத்தன்மையை நோக்கும் போது நால்வரின் பார்வையில் எவ்வித குறைப்பாடுகளும் காணப்படவில்லை. மேலும் செவிப்புலன்களிலும் பிள்ளைகளுக்கு எந்த வித கோளாறுகளும் இல்லை. பிள்ளைகளின் அறிவு விருத்தியில் கவனத்தை கலைக்கக்கூடிய கவனக் கலைப்பான்கள் பொதுவான காரணிகளே செல்வாக்கு செலுத்துகின்றன. பிள்ளைகள் செய்யும் குறும்புகளும் ஒரே மாதிரியான குறும்புகளாக காணப்படுகின்றன. மாணவர்களின் சமூக விருத்தியில் ஏனைய மாணவர்களுக்கு மத்தியில் நட்பென்னும் சிறந்த நடத்தையை வெளிக்காட்டுகின்றனர். மேலும் தனது ஒரு தேவைக்காக அனைத்து பிள்ளைகளும் தோழமையை நாடுகின்றனர். அதனால் மாணவர்களுக்கு சமூக விருத்தி ஏற்படுகின்றது. கூட்டமாக செயற்படும் போது கூட்டத்தில்சேர்ந்து செயற்படுவதற்கான விருப்பம் பிள்ளைகளுக்கு காணப்படுகின்றது.
பிள்ளைகளின் மனவெழுச்சி விருத்தி தொடர்பான விடயங்களில் அச்சம்இ வெட்கம்இ கோபம்இ பயம்இ இரக்கம்இ அழுகை போன்ற பொதுவான நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனர். மேலும் பிள்ளைகள் இன்ப நிலையிலும்இ துன்ப நிலையிலும் சிரித்தல்இ அழுதல் போன்ற ஒற்றுமையான நடத்தைகளை வெளிப்படுத்துகின்றனர். பிள்ளை வெறுப்படையும் போது பொருட்களை வீசியெறிதல்இ முதியோர்களை ஏசுதல்இ பிறரை அடித்தல் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றனர். அன்பை வெளிப்படுத்தும் போது கைக்குழுக்கல், கட்டித்தழுவல் போன்றவற்றை செய்கின்றனர். எல்லா பிள்ளைகளிடமும் ஒத்துணர்ச்சி காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாமல் பொய் சொல்லி மாட்டிக்கொள்ளுதல் காரணமாக பிள்ளைகளிடம் மனத்தடுமாற்றத்தை வெளிப்படுத்தும் பழக்கவழக்கங்களாக அழுதல், நகம் கடித்தல், ஆகிய மனவெழுச்சி நடத்தைகள் தோன்றுகின்றன.
இறுதியாக பிள்ளைகளின் ஒழுக்க ரீதியான விருத்தியில் பாடசாலை சீருடையை தனது உடலுக்கு ஏற்றவாறு அணிந்துக்கொண்டு வருகின்றனர். பிள்ளைகளின் உடை கற்றல் செயற்பாடுகளுக்கு பெரிதும் உதவுகின்றன. ஆகவே ஆய்வுகுட்படுத்தப்பட்ட பிள்ளைகளுக்கிடையில் குறிப்பிட்ட சில விடயங்கள் மாத்திரமே பொதுவான ஒற்றுமைகளாக விருத்தியடைந்துள்ளன.
ஆய்வு செய்யப்பட்ட பிள்ளைகளில் இனங்கண்ட வேற்றுமைகள்.
ஆய்வுக்குட்படுத்தப்பட்ட பிள்ளைகளில் இனங்காணப்பட்ட ஒற்றுமையான விடயங்களை விட வேற்றுமையான விடயங்களே அதிகமாக உள்ளன. இவை ஆண் பிள்ளைகள், பெண் பிள்ளைகள், உயர் அடைவு மட்டத்தில் இருக்கும் பிள்ளைகள்இ தாழ்ந்த அடைவு மட்டத்தில் இருக்கும் பிள்ளைகளுக்கிடையில் வேறுப்படுகின்றது.
பிள்ளைகளின் அறிவு விருத்தியில்; மொழித்திறன் விருத்தியில் உயர் அடைவு மட்டத்தில் உள்ள பிள்ளைகள் தனது மொழியை சரியான முறையில் உச்சரித்து பேசுகின்றனர். பேசும் போது வயதுக்கு மீறிய சொற்களை பயன்படுத்துவதில்லை அத்தோடு மெதுவாகவே தொடர்பாடுகின்றனர். பேசும் போது தொடர்ச்சியாக உச்சரிப்புடன் சொற்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் தாழ்ந்த அடைவு மட்டத்தில் உள்ள பிள்ளைகள் அப் பண்புகளுக்கு மாற்றமாகவே செயற்படுகின்றனர்.
பிள்ளைகளின் கற்கும் ஆற்றலில் கற்றதை நினைவுக்கூறுதல், கற்றலில் கவனம், தேர்ச்சியின் அளவு, சிந்தனைத்திறன் என்பன உயர் அடைவு மட்டத்தில் உள்ள பிள்ளைகளை விட தாழ்ந்த அடைவு மட்டத்தில் உள்ள பிள்ளைகளிடம் ஒப்பிட்டளவில் குறைவாகவே காணப்படுகின்றது. செயலாலும் பேச்சாலும் ஏற்படும் அறிவு விருத்தியில் கூட தாழ்ந்த அடைவு மட்டத்தில் உள்ள பிள்ளைகள் நிறத்தை மாத்திரமே கண்டறியக்கூடியவர்களாக உள்ளனரே தவிர கடினத்துவத்தை உணர்தல், மக்களை கவனித்தல்இ அளவையை கண்டறிதல்இ தொலைவை மதிப்பிடுதல்இ காலத்தை கணித்தல்இ சுறுசுறுப்பும் ஊக்கமும் உயர் அடைவு மட்டத்தில் உள்ள பிள்ளைகளிடமே சிறப்பாக விருத்தியடைந்துள்ளது.
பிள்ளைகளின் சமூக விருத்தியில் ஆண் பிள்ளைகளிடம் எதிர்ப்புஇ ஆதிக்கம் போன்ற நடத்தைகளும் பெண் பிள்ளைகளிடம் அடக்கம்இ கூச்சம் போன்ற மனவெழுச்சி நடத்தைகள் இனங்காணப்பட்டுள்ளன. கூட்டமாக செயற்படும் போது குழு செயல்களில் பங்கெடுத்தல், குழு தொடர்பாக அக்கரை காட்டுதல், குழுவில் தானாக செயலாற்றுதல் தலைமை வகித்தல், பிறரை வழிநடத்துதல் போன்ற விருத்திகள் தாழ்ந்த அடைவு மட்டத்தில் உள்ள பிள்ளைகளை விட உயர் அடைவு மட்டத்தில் உள்ள பிள்ளைகளிடம் மிக சிறப்பாக வள்ர்ச்சியடைந்துள்ளது.
தாழ்ந்த அடைவு மட்டத்தில் உள்ள பிள்ளைகளின் கற்றல் வீழ்ச்சிக்கு மிக முக்கியமான காரணம் ஒழுக்க விருத்தியின்மையாகும். தாழ்ந்த அடைவு மட்டத்தில் உள்ள பிள்ளைகள் உடலுக்கேற்ற உடை அணிந்திருந்தாலும் அதில் அக்கரை செலுத்த மாட்டார்கள். ஆசிரியர்கள்இ பெற்றோர்இ சகநண்பர்களை மதிக்கும் இயல்பு குறைவாகவே காணப்படும். ஏனையோருடன் பேசும் போது தகாத வார்த்தை பிரயோகங்களை மேற்கொள்வர். எப்போதும் பாடசாலை விதிமுறைகளை மீறி செயற்பட முயற்சிப்பர். இதனாலேயே பிள்ளைகளின் கற்றல் செயற்பாடுகளும் பின் தஙகிய றிலையில் உள்ளது. உயர் அடைவு மட்டத்தில் உள்ள பிள்ளைகளிடம் காணப்படும் ஒழுக்க விருத்தியே ஏனைய விருத்திகளுக்கு உறுதுணையாக விளங்குகின்றன.
தனியாள் வேறுபாடுகள் என்பது தவிர்க்க முடியாத ஒரு விடயமாகும். பிள்ளைகளுக்கிடையில் இவ்வாறான வேறுபாடுகள் உருவாகுவதற்கு காரணம் பின்வரும் காரணிகளாகும்.
1. பரம்பரை காரணிகள்
2. சூழற் காரணிகள்
இவ்விரு காரணிகளும் பிள்ளையின் விருத்தி, வளர்ச்சியில் பாரிய பங்களிப்பை செய்கின்றன.
7 மாணவர்களின் குணவியல்புகளையும்; அதற்கான காரணங்களையும் பிள்ளைவிருத்தி கோட்பாடுகளுடன் தொடர்புபடுத்தி பரிசீலிக்குக.
குழந்தை உருவாகுவதும் அது பிறந்து வளர்ச்சியடைவதும் ஓர் இயற்கை செயற்பாடாகும். ஆயினும் அக்குழந்தை தான் பிறந்து வாழும் சமூகத்துக்கும் தனக்கும் பயனுள்ளவனாக மாறவேண்டுமாயின் உடல், உள, ஆன்மா முதலிய சகல அம்சங்களிலும் பூரண விருத்தி அடைதல் வேண்டும். பிள்ளைகளின் குணவியல்புகளுக்கான முக்கிய காரணம் பரம்பரையாகும். பரம்பரையிலுள்ள உள்ள குறைப்பாடுகள் பெற்றோரிடம் இருக்குமாயின் பிள்ளைகளிடமும் அக்குறைபாடுகள் ஏற்படலாம். பிள்ளைகள் பிறந்து வளர்ச்சியடையும் போது பிள்ளை வளர்ந்து வரும் சூழலானது பிள்ளையின் வளர்ச்சியிலும், விருத்தியிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
5 வயது முதல் 12 வயது வரையுள்ள காலப்பகுதி பிள்ளைப் பருவம் என உளவியலாளர்கள் தீர்;மானித்துள்ளனர். 9 வயது முதல் 13 வயது வரையுள்ள வருடம் பிள்ளை பருவத்தின் பிற்பகுதி அல்லது முன் கட்டிளமைப்பருவம் என கூறப்படுகின்றது. பாடசாலைக்கு செல்லும் இப் பருவத்துப் பிள்ளைகள் உடல், உள, சமூக, மனவெழுச்சி வளர்ச்சியில் பெரும் வேறுபாடுகள் காட்டுவர். ஏனெனில் ஒவ்வொரு பிள்ளையும் வௌ;வேறு குடும்ப சூழலிருந்தும் தனது குடும்பத்துக்குரிய பாரம்பரிய பண்புகளுடனும் பாடசாலைக்கு வருகின்றனர்.
இப் பருவத்தில் பிள்ளைகள்; தாம் விரும்பியதை செய்ய முற்படுவர். காரணம் இப் பருவ பிள்ளைகள் தமது உடலசைவுகளை விரும்பியவாறு இயக்குவதற்கான உடல் வலிமை அதிகரிக்கும். மேலும் இப் பருவ பிள்ளைகள் அறிவியல் விழிப்புடையவர்களாக காணப்படுவதனால் அறிவைப் பெறுவதில் அதிகம் ஆர்வமுள்ளவர்களாக இருப்பார்கள். மேலும் இப் பருவத்தில் பிள்ளைகள் பிறரை மதிக்கும் இயல்பு குறைவாக காணப்படுவதனாலேயே ஆசிரியர் சொற்படி கேட்காமல் பாடசாலை விதிமுறைகளை மீறுகின்றனர்.
பிள்ளை பருவத்தின் பிற் பகுதியில் அலடசியத் தன்மை தோன்றும். இதனால் சில சந்தர்ப்பங்களில் சமூக ஒழுக்கங்கள், பாடசாலை சம்பிரதாயங்கள் ஆகியவற்றை அலட்சியம் செய்வதன் மூலம் ஆசிரியரிக்கு தொல்லைகள் ஏற்படுவதுடன் இப் பருவத்தில் சமூக, பாடசாலை ஒழுக்க விதிகளுக்கு மாறான செயல்களில் ஈடுபடுவதில் இன்பம் பெறுவது இயல்பாகும்.
இப் பருவத்தில் ஆண், பெண்கள் சகபாடி குழுக்களின் தோழமையை நாடுகின்றனர் காரணம் இப் பருவத்தினர் பெற்றோரை விட சகபாடி குழுக்களில் அதிக பரிவும் நாட்டமும் காட்டுவர். சகபாடிகள் குடும்பத்தில் பெற முடியாத உரிமை உணர்வை அவர்களுக்கு வழங்குகின்றனர்.
மேலும் இப் பருவத்தினர் சுதந்திரத்தை பெரிதும் விரும்புவதினால் எவரும் தம்மை மேற்பார்வை செய்வதை விரும்பமாட்டார்கள். இப் பருவத்தில் ஆண் பிள்ளைகளும், பெண் பிள்ளைகளும் பெரும்பாலும் ஒன்று சேர மாட்டார்கள். இருபாலாரும் ஒருவரையொருவர் வெறுத்துக் கொள்ளும் நிலையில் இருப்பர். அதனால் ஒத்த பாலினர் உறவே மேலோங்கியிருக்கும்.
இப் பருவம் குறும்புகள் செய்யும் விளையாட்டுப் பருவமாக இருப்பதனால் பிள்ளைகள் அதிகமாக தமது உடைகளில் கவனம் செலுத்த மாட்டார்கள். இதே விளையாட்டு இயல்புகள் கற்றல் செயற்பாடுகளிலும் தாக்கத்தை செலுத்தும். இப் பருவத்தில் மனவெழுச்சி பண்புகளின் தாக்கம் அதிகமாகவே காணப்படும். கவலை ஏற்பட்ட உடனே அழுதல், தன்னை தாக்கியவர்களை ஆயுதங்களால் தாக்குதல் போன்ற விடயங்களை குறிப்பிடலாம்.
மேலும் இப் பருவத்தில் பிள்ளைகள் விளையாட்டுக்களில் அதிகம் ஈடுப்படுவதினால் களைப்பின் அறிகுறியாக வியர்வை ஏற்படுவதினால் பசி ஏற்பட்டு பிள்ளைகளின் உடல் விருத்தி ஏற்படும். உடல் விருத்தியினால் நிறை, பருமன், எடை என்பன இப் பருவத்தில் உண்டாகும்.
8 ஒவ்வொரு பிள்ளைகளினதும் விருத்திக்கட்டங்கள் மற்றும் பிள்ளை விருத்தி கோட்பாடுகள் என்பவற்றை கவனத்தில் எடுத்து பெற்றோர் மற்றும் ஆசிரியர்களுக்கான வழிகாட்டல்களை விருத்தி செய்யவும்.
சமூகத்தின் மிகச் சிறிய ஆக்க அலகுகளாக பெற்றோர்களும் அவர்களின் வாழ்க்கையினை ஒளியூட்டும் ஒளிவிளக்குகளாக குழந்தைகளும் காணப்படுகின்றனர். குடும்பத்திலிருந்து விடைப்பெற்று வரும் குழந்தைகளை வழிப்படுத்தி வகுப்பறை கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளை சிறந்த முறையில் ஒழுங்குப்படுத்தவதற்கு பிள்ளைகளின் வளர்ச்சி பற்றிய அறிவு ஒவ்வொரு ஆசிரியருக்கும், பெற்றோருக்கும் இன்றியமையாத ஒன்றாகும்.
வளர்ச்சி, விருத்தி என்னும் இரு வழிகளினூடாக பிள்ளையிடம் மாற்றம் உண்டாகின்றது. வளர்சிசியானது உருவ மாற்றத்தினையும், விருத்தி பண்புகளில் நுட்ப முறையில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றது. பிள்ளை விருத்தி என்பது சூழலிருந்து பெற்றுக்கொள்ளும் பிள்ளையின் வளர்ச்சியுடன் தொடர்பான உதவிகளுக்கும், வழிகாட்டல்களுக்கும் ஏற்ப ஒழுங்கமைக்கப்பட்ட முறையான உருவாக்கத்தின் விளைவாகும். இவ்வாறு பிள்ளையின் விருத்தியில் செல்வாக்கு செலுத்துவோராக ஆசிரியர்களும், பெற்றோர்களும் விளங்குகின்றனர்.
மனித வாழ்வின் பிரதான வளர்ச்சி கட்டங்கள் குழந்தைப்பருவம், கட்டிளமைப்பருவம், வளர்ந்தோர்ப்பருவம் என வகைப்படுத்தலாம். அவற்றில் பிள்ளைகளின் ஆரம்ப நிலை விருத்தி பருவமானது மிக முக்கியமானதாகும். ஏனெனில் இதிலே தான் பிள்ளையின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் அறிவு நடத்தை சார் அம்சங்களுக்கான அத்திவாரமிடப்படுகின்றது. அந்த வகையில் அது தொடர்பான அறிவை ஆசிரியர்களும், பெற்றோர்களும் கொண்டிருத்தல் இன்றியமையாததோடு ஆசிரியரின் கற்பித்தல் செயற்பாடுகளுக்கும் வழிவகுக்கும்.
பிள்ளை விருத்தியில் பிறப்பு முதல் 19 வயது வரையேற்படுகின்ற கற்றலும், வளர்ச்சியும் இன்றியமையாததாகும். ஏனெனில் இக் காலப்பகுதியிலேயே உடல், உள, சமூக, மனவெழுச்சி, ஒழுக்கம் சார் வளர்ச்சிகள் ஏற்படுகின்றன. பிள்ளை பருவத்தினை வயதடிப்படையில் உளவியலாளர்கள் இரு வகைப்படுத்துகின்றனர்.
1. முன் பிள்ளை பருவம்
2. பின் பிளளை பருவம்
பிள்ளை பிறந்தது முதல் 2 வருடங்கள் முடியும் வரையுள்ள காலப்பகுதியை உளவியலாளர்கள் முன் பிள்ளை பருவம் என்கின்றனர். பிள்ளைகள் சில தெறிவினைகளுடன் பிறக்கின்றன. இக்காலப்பகுதியில் கண்களால் பார்ப்பவற்றை ஞாபகம் வைத்திருத்தல், விளங்கல், ஒழித்து வைத்த பொருட்களை தேடல் நிரப்புத்தன்மையடைவதே காரணமாகும். இதனால் மனப்பாடம் தோன்றும் என்கின்றார் பியாஜே. இதனால் உளவிருத்தி ஏற்படுவதோடு குடும்ப அங்கத்தவர் உறவினர்களுடன் தொடர்பை ஏற்படுத்துவதால் பிள்ளை சமூக ரீதியான விருத்தியும் அடைகின்றது.
இப்பருவத்தினைப் பின்வரும் விருத்தியின் கீழ் சிறப்பாக ஆராயலாம்.
1. உடலியக்க வளர்ச்சி
2. இயக்கத்திறன்களின் வளர்ச்சி
3. புலனுணர்ச்சிகளின் வளர்ச்சி
4. சமூகமனவெழுச்சி வளர்ச்சி
5. மொழி வளர்ச்சி
6. ஆரம்ப அறிவு வளர்ச்சி
உடலியக்க வளர்ச்சியென்பது வயது அதிகரிப்பதுடன் ஒருவரின் உடல் உறுப்புக்களில் ஏற்படுகின்ற மாற்றங்களையே குறித்து நிற்கின்றது. அதாவது பிள்ளையின் முதலிரு வருடத்திலும் உயரத்திலும் நிறையிலும் விரைவான வளர்ச்சியை அடைவதோடு பிள்ளை ஐந்து மாத நிறைவில் இருமடங்காகவும் 12 மாதத்தில் மூன்று மடங்காகவும் விருத்தியடைவதோடு முதல் வயதில் 10-12 அங்குல உயரத்தையும் இருவயது முடிவில் தளர்நடைபகுதியினராகத் தமது வளர்ச்சியில் மறுபகுதி உயரத்தையும் பூர்த்தி செய்தவர். முதல் இருவருடமும் வளர்ச்சியும் சுற்றலும் மிக விரைவாகவும் இருக்கும். பிள்ளையின் உருவியல் மாற்றம் உடலியல் ரீதியாகவும் விகிதாசார அடிப்படையில் நிகழும். அத்தோடு தசைகள், ஓமோன்கள் ஆகியவற்றின் மாற்றம் நிகழ்வதோடு எலும்பு, மூளை வளர்ச்சியைப் போலன்றி சகல தசைநார்களையும் பிள்ளை ஆரம்பத்திலும் பெறுவதோடு தசை இழையங்களின் அதிகரிப்பினால் தசைநார்கள் நீளத்திலும் தடிப்பிலும் வலுவிலும் மாற்றம் நிகழ்கின்றது. இது கட்டிளமைப்பருவம் வரை இடம்;பெறுவதால் உடலியக்க வளர்ச்சி சிறப்பாக அமையும். இயக்கத்திறன்களில் மாற்றம் ஏற்படும். உயரம், நிறை போன்ற அளவு ரீதியான அளவைகள் மூலம் இதனையறியலாம். இவ்வாறு பிள்ளைகளின் ஆரம்பநிலை உடலியக்க வளர்ச்சி பற்றி ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் அறிந்திருப்பது அவசியமானதாகும்.
ஏனெனில் முன்பள்ளியிலே பல்வேறுபட்ட பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் வேறு இயல்புள்ளவர்களாகவும் உடலியக்க செயற்பாடு உடையவர்களாகவும் காணப்படுவர். உதாரணமாக அதாவது சில பிள்ளைகள் நல்ல சுறுசுறுப்பாகக் காணப்பட சில பிள்ளைகள் சுறுசுறுப்பற்றுக் காணப்படலாம். இவ்வாறு ஏன் வேறுபடுகின்றது என்பதனைக் கண்டறிவதும் தீர்வுகளை வழங்குவதும் இன்றியமையாததாகும். இவ்வாறு அறிந்திருந்தால்தான் பிள்ளையின் விருத்திக்கு தடையாக அமைந்த காரணியைக் கண்டறிந்து குழுவாகப் பிள்ளைகளைச் செயற்படச் செய்தல், விளையாட்டுக்களில் ஈடுபட வைத்தல் என ஒவ்வொருவரின் உடலியல் வளர்ச்சிக்கேற்ப கற்பித்தலை மேற்கொள்ளலாம்.
சிறந்த எடுத்துக்காட்டாக முன்பள்ளி பிள்ளைகளைக் குழுக்களாக்கி ஓட்டப்பந்தயம், சறுக்கல், நீச்சல், நடனம், உடற்பயிற்சி போன்ற பல்வேறுபட்ட செயற்பாடுகளில் ஈடுபடுத்தி அவர்களுக்கிடையேயுள்ள உடலியக்க விருத்திசார் வேறுபாடுகளை இணங்கண்டு அவற்றினை நிவர்த்தி செய்ய பிள்ளையின் உடலியல் விருத்தி தொடர்பான அறிவு இன்றியமையாததாகும். அதனை அறிந்திருந்தால்தான் பிள்ளையின் விருத்திக்கேற்றவாறு கற்பித்தலை மேற்கொண்டு முன்பள்ளிச் செயற்பாட்டில் பிள்ளைகளுக்குச் சிறந்த விருத்தியை ஏற்படுத்தலாம்.
தன்னிச்சையான அடிப்படை திறன்களிலே காணப்படும் ஒன்றிணைந்தலும் இயைபூக்கமும் காரணமாக படிப்படியாக ஏற்படும் சிக்கலான திறன்களுடன் வளர்ச்சியின் தொடர்ச்சியான நிகழ்வு இணைந்து செல்லும் போது பிரச்சினைக்குரிய பருவம் ஏற்படுகின்றது. பிள்ளைகளின் இயக்க திறனை கட்டுப்படுத்த விளையும் போது அதன் ஏனைய திறன் விருத்தியையும் இழக்க நேரிடும். இருப்பினும் பிள்ளையின் இயக்கத்தில் சில குறைப்பாடுகள் காணப்படுவது பொது நிகழ்வாகும். இதனை நிவர்த்தி செய்ய பல்வேறு வழிகள் காணப்படுகின்றன. இயக்க திறன் விருத்தியை மேற்கொள்ள வெறுமனே பிள்ளைகளுக்கு எழுத்து பயிற்சிகளை மாத்திரம் மேற்கொள்ளாமல் பிள்ளையின் மூளை, தசைநார்கள், போன்றன சிறப்பாக செயற்படக்கூடிய வகையிலான நீந்தல், ஆடல், பாடல், கண்கட்டி விளையாடுதல், ஊஞ்சலாட வைத்தல், மண்ணில் விளையாட வைத்தல் போன்ற பல்வேறு செயற்பாடுகளில் பிள்ளைகளை ஈடுப்படுத்தி அவர்களின் இயக்கத்திறனை விருத்தியடைய செய்வது ஆசிரியர் மற்றும் பெற்றோர்கள் பொறுப்பாகும்.
பிள்ளையை சிறந்ந வகையில் வழிநடத்தி முன்பள்ளி செயற்பாட்டில் விருத்தியை ஏற்படுத்த அசிரியர்களுக்கு பிள்ளையின் புலனுணர்ச்சி தொடர்பான அறிவு இன்றியமையாததாகும். ஏனெனில் மீதிறன் கூடிய பிள்ளைகளும் குறைந்த பிள்ளைகளும் வகுப்பறையில் காணப்படுவர். அவரவர் திறனுக்கு ஏற்றாற் போல கற்பித்தலை மேற்கொண்டு அனைத்து பிள்ளைகளிலும் ஆளுமையான விருத்தியை ஏய்படுத்துவதே ஆசிரியரது இலக்கு. அந்ந வகையில் புலனுணர்வினூடாக பிள்ளைகளை விருத்தியடைய செய்யவேண்டுமாயின் வர்ணப்படங்கள், உருக்களை இனங்காணல், வித்தியாசங்களை இணங்காணல், சிறுவர் பாடல்கள் காண்பித்தல், வண்ணப்பூங்காக்களுக்கு அழைத்த செல்லல், இயற்கை காட்சி ஒலிகளை அவதானிக்க செய்தல் போன்றவற்றினூடாக முன்பள்ளி விழுத்தி செயற்பாட்டினை ஆசிரியர்கள மற்றும் பெற்றோர்கள் மேற்கொள்ள முடியும்.
வகுப்பறை கற்றல் கற்பித்தலை சிறந்த வகைளில் கொண்டு செல்ல பிள்ளைகளின் சமூக மனவளர்ச்சி பற்றிய அறிவு ஆசிரியர்களுக்கும், பெற்றோர்களுக்கும் இன்றியமையாத ஒன்றாகும். பிள்ளையின் சமூக மனவளர்ச்சி வளர்ச்சிகள் பெருமளவில் முதிர்ச்சியிலும் சூழலிலுமே தங்கியுள்ளது. பெற்றோர் பிள்ளைகளிடம் அன்பு செலுத்தும் போது பிள்ளைகள் அதனையொரு பாதுகாப்பான இடமாகவே உணருவர். பெற்றோரிடமிருந்து அன்பு பெற்றுக் கொள்ள முடியாத பிள்ளைகள் சமூகமயமாதலுக்குட்படாமல் பாடசாலையிலும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுவர். பிள்ளைகள் சில நேரம் தம்மால் கட்டுப்படுத்த முடியாத கோபம், அடம்பிடிப்பு போன்றவற்றை செய்யும் போது பெற்றோர்கள் அவர்களை தண்டிக்காமல் வேறு ஏதேனும் விடயங்களினூடாக அவர்களை திசைத்திருப்பி மனமுறிவை தவிர்க்க வேண்டும்.
ஆசிரியருக்கு பிள்ளையின் சமூக மனவெழுச்சி பற்றிய அறிவும் இன்றியமையாத ஒன்றாகவே காணப்படுகிறது. இதனை அறிந்து பிள்ளையின் முன்பள்ளி செயற்பாட்டினை சிறப்பாக திட்டமிட முடியும். இவ்வறிவோடு குழு விளையாட்டு, நடனம், உரையாடல்கள், கைக்குலுக்கல்கள் போன்றவற்றின் மூலம் பிள்ளைகளிடையே அன்பு, பாசம், ஒற்றுமை, விட்டுக்கொடுப்பு போன்ற நற்பண்புகளை விருத்தியடைய செய்ய முடியும்.
பிள்ளைகளின் மொழி விருத்தியை ஏற்படுத்த ஆசிரியர்களும், பெற்றோர்களும் பிள்ளைகளுடன் அதிகமாக உரையாடுவதனால் மொழி வளர்க்கப்படுகிறது. பொருட்களை கூவி விற்க செய்தல், கதை கூறல், சிறுசிறு சொற்களை கற்பித்தல் மூலம் மொழி விருத்தி செய்யலாம். மேலும் ஆசிரியர்களும், பெற்றோர்களும் பிள்ளைகளின் நுண்ணறிவை விருத்தி செய்ய பிள்ளைகளின் அறிவு, நினைவாற்றல், ஞாபகம் என்பவற்றை வளர்க்க புதிர்கள், விடுகதைகள், கேட்டல், விரல்கள், கட்டைகள், புளியம் விதைகளில் எண்ணுதல், கழிவுப் பொருட்களில் ஆக்கங்கள செய்தல் போன்றவற்றினூடாக வளர்த்துக் கொள்ள முடியும்.
எனவே பிள்ளையின் பூரண வளர்ச்சியில் ஆசிரியர்களினதும், பெற்றோர்களினதும் பணிகள் அளப்பரியது. பிள்ளைகளிடையே இவ்வாறான விருத்தியை ஏற்படுத்துவதனால் நவீன சூழலுக்கேற்ற ஆற்றலும் ஆளுமையுமுள்ள இளைய தலைமுறையினரின் உருவாக்கத்துக்கு அடித்தளமிட முடியுமென்பதில் ஐயமில்லை.
உம்மு ஷாறா.